தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், டெல்லியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் விஜய்யின் தவெக என காங்கிரஸ் நிர்வாகிகள் இருவேறாகப் பிரிந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், ராகுல் காந்தி அவர்களுக்கு ஒரு முக்கியமான கட்டளையைப் பிறப்பித்துள்ளார். “கூட்டணி பற்றி பொதுவெளியில் பேச வேண்டாம், ட்வீட் போட வேண்டாம், அறிக்கை விட வேண்டாம்” என வேதனையோடு அவர் அறிவுறுத்தியதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நிலவும் இந்த மோதல்கள் ராகுல் காந்திக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையால் திமுக – காங்கிரஸ் இடையே ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து டெல்லி தலைமையே இறுதி முடிவை எடுக்கும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக நிர்வாகிகள் ஒவ்வொருவரின் கருத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் நேரத்தில் கட்சி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக பக்கம் சாயுமா அல்லது திமுகவுடனேயே நீடிக்குமா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்றாலும், “சஸ்பென்ஸ்” மட்டும் குறையவே இல்லை!
