தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்துப் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசின் வாக்குறுதி மீறல்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

​இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது தவெக அளித்த வாக்குறுதிகளுக்கும், தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

​குறிப்பாகத் தவெகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ முற்றிலும் திசை திருப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டில் பிறக்கும் ‘அனைத்து குழந்தைகளுக்கும்’ தங்க மோதிரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அரசு மருத்துவமனையில் பிறந்தால் மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தவெக அரசு மீறிவிட்டது” என்று அவர் சாடினார்.

​மேலும், பட்ஜெட் உரையின் போது இந்திய அளவில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக நிதியமைச்சர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், “திமுக ஆட்சியின் சாதனைகளை மறைமுகமாக ஒப்புக்கொண்டு பாராட்டியதற்காக நிதியமைச்சருக்கும், தவெக முதல்வருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நக்கலாகக் குறிப்பிட்டார்.

​தேர்தல் வாக்குறுதிகளைத் தவெக அரசு முறையாக நிறைவேற்றவில்லை என்றும், திமுக அரசின் வரலாற்றுச் சாதனைகளைத் தங்களது பட்ஜெட்டில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள், தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டை கிளப்பியுள்ளன.