தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இன்று உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை. வியாபாரிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்று தமிழகத்தில் நிலவுகிறது. இந்த ஆட்சியில் நிறைகள் குறைகள் கண்டிப்பாக இருக்கிறது.
சாலையில் வாக்கிங் சென்றால் கூட செயின் பறிக்கப்படுகிறது. தினசரி என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதால் சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டாலின் தான் இரும்பு கரம் கொண்டு சரி செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதனை சரி செய்தால் மட்டும் தான் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தடுக்க முடியும் என்றார்.
அதன்பிறகு திமுக அரசுக்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்க முடியும் என்ற கேள்விக்கு, திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு இது என்ன தேர்வா.? நிறையும் குறையும் சமமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 50 க்கு 50 மதிப்பெண்கள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
ஆவண கொலைக்கு அடிப்படை காரணமே ஜாதி தான். எத்தனை பெரியாரும் பாதிரியாரும் இங்கு வந்து சொன்னாலும் இன்னும் அந்த ஜாதி வெறி மாறவில்லை. அந்த ஜாதி வன்மம் தான் கொலையை தூண்டுகிறது. மேலும் இது அத்தனை மக்களின் மனதிலும் மாற வேண்டும் என்றார்.
