சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மீது மிகுந்த பற்று கொண்ட ஒரு தொண்டர் ஏற்கனவே பதிவு செய்திருந்த கட்சியில், தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த சசிகலா, அக்கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்றும், அதற்குத் தேர்தல் ஆணையம் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தனிமரம் தோப்பாகாது என்பார்கள். நாங்கள் தோப்போடு வந்திருக்கிறோம். இந்தத் தென்னந்தோப்பு சின்னம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் அடையாளமாக, மக்களின் சின்னமாகக் கருதப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எங்கள் வேட்பாளர்கள் இந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய சசிகலா, “தமிழக மக்களை திமுக அரசு கசக்கிப் பிழிகிறது. அந்தத் தீய சக்தியை வேரறுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் தலைகீழாக மாறிவிட்டது. திமுக ஆட்சியை ஓட ஓட விரட்டுவதே எங்கள் முக்கியப் பணி. வரும் தேர்தலில் மக்களின் தீர்ப்பே இறுதியானது” என்று காட்டமாக விமர்சித்தார். தேர்தல் கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நாங்கள் தனித்துச் செல்ல மாட்டோம்; கொள்கை ரீதியாக ஒற்றுமையுள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம்.
நான் முதல்வர் வேட்பாளரா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். தேர்தல் முடிவுகள் வரும்போது எங்கள் வாக்கு வங்கி என்ன என்பது அனைவருக்கும் புரியும்” என்றார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, “அவர் சாதித்தாரா இல்லையா என்பது வரும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்” என்று சசிகலா பதிலளித்தார். மேலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளைத் தங்களின் பாதையாகக் கொண்டு, மக்களின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
