தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்துப் பேசிய போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், அ.தி.மு.க–பா.ஜ.க கூட்டணியைப் பற்றியும் முக்கியமான கருத்துகளை பதிவு செய்தார்.

“தமிழகத்தில் பாஜக–அதிமுக கூட்டணியில் எந்தவிதமான விரிசலும் இல்லை. கூட்டணியின் ஆட்சி அமையும் விஷயத்தில் நான் கருத்து கூறவில்லை என்றாலும், பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஆட்சி சிறப்பாக அமையும்; இதை பெரிய தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி முன்பே தெளிவாக கூறியிருக்கிறார்,” என அவர் கூறினார்.

மேலும், திருச்சி சிவா எம்.பி., தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரைப் பற்றி தெரிவித்த கருத்துகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழிசை கூறினார். “மிகப்பெரிய தலைவரை இழிவுபடுத்திய அந்தக் கருத்தை யாரும் ஏற்க முடியாது. அதற்கு மன்னிப்பும் கேட்கப்படவில்லை. இதை முதல்வர் ஸ்டாலின்  விட்டு விடச் சொல்லுகிறார்.

இது மோசமான நிலை. அவர்களுக்கு பயம் இல்லை. ஆனால் ஓட்டுக்காக மட்டும் தான் அனைவரும் பயப்படுகிறார்கள். இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தி.மு.க.வுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

திருச்சியில் காமராஜர் ஏற்படுத்திய பெல் தொழிற்சாலையால் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்தப் பணி போன்ற பல விஷயங்களை திருச்சி சிவா முதலில் நேரில் சென்று பார்வையிட வேண்டும்,” எனக் கண்டித்தார்.

அதோடு, தமிழகத்தில் நடைபெறும் மணல் கடத்தல், ஊழல், தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை முயற்சிகள் குறித்து விமர்சித்த தமிழிசை, “மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்த மண்டல தலைவர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ‘1.5 கோடி உறுப்பினர்கள் சேருங்கள், 30% வாக்காளர்களை பெற்றுக்கொள்ளுங்கள்’ என சொல்லி வருகிறார்.

ஆனால் மக்கள் தி.மு.க.வினரை நம்ப மாட்டார்கள்,” எனக் கடுமையாக விமர்சித்தார். தமிழிசையின் இந்த பேச்சு, மாநில அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.