தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூரில் முன்னாள் மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது,

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை அரசு மிகக் கடுமையான சட்டங்கள் மூலம் ஒடுக்க வேண்டும். தவறு செய்பவர்களுக்கு சட்டத்தின் மீதும், தண்டனை மீதும் அச்சம் வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.

தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் எந்தவித நெருக்கடியும் அளிக்கவில்லை. எங்களின் தேவைகளை உரிமையோடு கேட்டுப் பெறுவோம். ஆனால், பா.ஜனதா – அ.தி.மு.க. கூட்டணி என்பது ஒரு பொருந்தாத கூட்டணி. பிரதமர் மோடி தனது உரைகளில் எங்கும் எடப்பாடி பழனிசாமியின் பெயரையோ அல்லது அ.தி.மு.க-வின் பெயரையோ குறிப்பிடுவதில்லை. வெறும் ‘என்.டி.ஏ’ கூட்டணி என்றே பேசி வருகிறார்.

எங்கள் தலைவர் ராகுல் காந்தி எப்போதும் கூட்டணி கட்சிகளின் பெயர்களை பெருமையுடன் குறிப்பிடுவார். அண்மையில் ராகுல் காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்ததை விமர்சிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அவர் துணிச்சலான ஒரு ‘சிங்கப் பெண்’. அவர் தனது சொந்த காரிலேயே சென்று ராகுலை சந்தித்தார்.

“யாரோ சிலர் முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு, மாறுவேடத்தில் சென்று பா.ஜனதாவிடம் தமிழக மக்களை அடகு வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், எங்கள் சந்திப்பு மிகவும் நேர்மையானது மற்றும் கண்ணியமானது.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.