சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பல வருடங்களாக சீமான் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் புகார் கொடுத்த அந்த பெண்மணி சீமான் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அப்படி இருக்கும்போது இதில் திமுக பின்புலம் இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. சீமானை சமாளிப்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது அவர் திமுகவுக்கு தூசி மாதிரி. ஆனால் நாங்கள் இந்த வழக்கில் தலையிடவில்லை. இந்த வழக்கில் நாங்கள் தலையிட்டால் எளிதாக திசை திருப்பி இருக்கலாம். சீமான் தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி தான் தற்போது இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெறுகிறது.

இதிலிருந்தே இந்த பிரச்சனைக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எல்லா வழக்குகளையும் ஒரேகோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் அதன்படியே அனைத்தும் ‌ நடக்கும் என்று கூறினார். மேலும் முன்னதாக பெரியார் பற்றி சீமான் விமர்சித்ததால் தான் திமுக இவ்வளவு நாள் இல்லாமல் இந்த வழக்கை முடிக்க தீவிரம் காட்டுவதாகவும் தன்னை சமாளிக்க முடியாமல் தான் திமுக இப்படி எல்லாம் செய்வதாகவும் சீமான் குற்றசாட்டு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ரகுபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.