தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு தேனி மாவட்டத்திற்காக எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கடந்த 4 வருடங்களாக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்ததால் தற்போது மக்கள் முன்நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆட்சி தான் பொற்கால ஆட்சி என்று பொதுமக்களே பாராட்டுகிறார்கள் அந்த அளவுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

திமுக அரசு போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிவிட்டது. தமிழ்நாட்டில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமைகள்  போன்றவைகள் தொடர் கதையாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கிறது. சிறுமிகள் அப்பா அப்பா என்று கதறும் போது ஸ்டாலின் எங்கே போனார். தமிழ்நாட்டில் உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை.திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுவிட்ட நிலையில் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்துவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார். மேலும் இது திராவிட மாடல் ஆட்சி கிடையாது ஸ்டாலின் மாடல் ஆட்சி என்றார்.