தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘மெகா கூட்டணி’ மாற்றம் அரங்கேறப் போகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS), அவரது தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது. தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்து வருவதால், அறிவாலயமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் ஓபிஎஸ்-ஐ, தமிழக அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்துப் பேசியுள்ளது இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு தனித்துச் செயல்பட்டு வந்த ஓபிஎஸ், தற்போது திமுகவின் பக்கம் சாய்ந்திருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
