2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் ‘மக்கள் சந்திப்பு பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவர் செல்லும் இடமெல்லாம் திமுக அரசை நேரடியாக விமர்சித்து உரையாற்றி வருவது அரசியல் சூழலை சூடுபிடிக்கச் செய்துள்ளது. இதனால், திமுக நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ கூட்டங்களில் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து பேச திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது தகவலாக வெளியாகியுள்ளது.

கட்சியின் மேலிடம் நேரடியாக வழங்கிய இந்த உத்தரவின் மூலம், திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜயின் பெயரை தவிர்த்து, கட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மட்டுமே பேச வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியை குறிவைத்து பேச்சுகள் எடுப்பதால் அவருக்கு தேவையற்ற முக்கியத்துவம் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும், எதிர்க்கட்சிகளிடையே புதிய விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.