திமுக ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் பெரும் பகுதி செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும், சுமார் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எங்கே சென்றன எனத் தெரியவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக அரசு 11.32 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறி வரும் நிலையில், உண்மையில் அதில் 9 சதவீதத்திற்கும் குறைவான முதலீடுகளே தரையில் இறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள பெரும் தொகை குறித்த விவரங்கள் மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் ‘கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’ கலாச்சாரம் காரணமாகவே கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும், திமுக அரசு முதலீடுகள் குறித்துத் தவறான புள்ளிவிவரங்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

முதலீடுகள் மட்டுமின்றி, இதனால் உருவாவதாகக் கூறப்பட்ட 34 லட்சம் வேலைவாய்ப்புகளும் வெறும் காகித அளவிலேயே இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் இத்தகைய நிதி நிர்வாகக் குளறுபடிகளை மறைக்காமல், உண்மையான முதலீட்டு நிலவரத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.