கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கல்லியூரை சேர்ந்த சுனில் (42) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பின்சி (36) அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி மன உளைச்சல்கள் ஏற்பட்டன. மேலும் சுனில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வீடு திரும்பி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், பின்சி இரவு நேரங்களில் அடிக்கடி செல்போனில் பேசுவதைக் கண்டு சந்தேகப்பட்ட சுனில், இதனை காரணமாக வைத்து மனைவியுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவும் இவர்களுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. மறுநாள் காலை பின்சி வழக்கம்போல் பணிக்கு வராததால் சக பணியாளர்கள் அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது, பின்சி அரிவாளால் வெட்டப்பட்டு இரத்தக் குளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

சம்பவ தகவலைப் பெற்ற நேமம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேசமயம் சுனிலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது நடத்தையில் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சுனில் தான் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.