பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு தொழிலாளியின் உடலை எலிகள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வனவிலங்குகள் அல்லது தெரு நாய்கள் தாக்கும் செய்திகளே வரும் நிலையில், மனித உடலை எலிகள் சிதைத்திருப்பது ஒரு அரிய மற்றும் கவலையளிக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பதிண்டா நகரின் பாட்டா மார்க்கெட் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே தொழிலாளி ஒருவரின் சடலம் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, உயிரிழந்தவரின் கண்கள் மற்றும் முகத்தின் சில பகுதிகள் மிக மோசமான நிலையில் கடித்துக் குதறப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடலை மீட்க உதவிய ‘நௌஜவான் வெல்பேர் சொசைட்டி’ அமைப்பின் தலைவர் சோனு மகேஸ்வரி இது குறித்துக் கூறுகையில், “உயிரிழந்தவரின் முகம் மற்றும் கண்களை எலிகள் கடித்துத் தின்றுவிட்டன. அந்தப் பகுதியில் எலிகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது,” என வேதனையுடன் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தினக்கூலித் தொழிலாளி என்பது தெரியவந்தது. வேலை முடிந்து தினசரி பாட்டா மார்க்கெட் பகுதியிலேயே அவர் உறங்குவது வழக்கம். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய சக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸாரின் முறைப்படியான விசாரணைக்குப் பிறகு, தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உதவியுடன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
