ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இளம் ராணுவ கேப்டன் அமன் குமார் சிங் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது ஊர் மசூதியில் பாங்கு (அஸான்) ஒலியைக் குறைத்து இஸ்லாமிய மக்கள் முன்மாதிரியான அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமன் குமார் சிங் (25), ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் 20-வது ராஜபுதன ரைஃபிள்ஸ் பிரிவில் கேப்டனாகப் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சக வீரர்கள் அவரை தோளில் சுமந்து சென்று ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். கட்டுக்கோப்பான ராணுவ வீரருக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் அமனின் உடல் அவரது சொந்த ஊரான அப்துல் ஹமீது நகருக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டின் அருகே அமைந்துள்ள மசூதி நிர்வாகத்தினர், வீரரின் குடும்பத்தின் மீது கொண்ட மரியாதையினால் மசூதி ஒலிபெருக்கியின் சத்தத்தைக் குறைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து மசூதி காப்பாளர் ஜுல்பிகார் கான் கூறுகையில், “அமன் எங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்தவர். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ரமலான் கால ஒலிபெருக்கி அறிவிப்புகளைக் குறைத்துவிட்டோம்,” என்றார். வழக்கமாக நான்கு முறை செய்யப்படும் அறிவிப்புகள், தற்போது ஒரு முறை மட்டுமே செய்யப்படுவதாக மற்றொரு நிர்வாகியான ஜாஹீர் ஹபீஸ் தெரிவித்தார்.

ஜஸ்வந்த் சிங் – விபா தம்பதியினரின் ஒரே மகனான அமன், பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயல்பட்டவர். கோரக்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், காஜியாபாத்தில் பி.டெக் (சிவில் இன்ஜினியரிங்) சேர்ந்தார்.

முதல் செமஸ்டர் முடிவிலேயே ‘தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்’ (Technical Entry Scheme) மூலம் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆகத் தேர்வானார். கடந்த 2023 டிசம்பர் மாதம் ராணுவ அதிகாரியாகப் பணியேற்றார்.

பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்து, நாட்டுப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்த இந்த இளம் வீரரின் மறைவு குஷிநகர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.