தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர்கள்   மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் போது, அவரை சந்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். அப்படி நடந்த ஒரு நிகழ்வில், விஜய்க்கு நடிகர் அஜித்துடன் இணைந்து இருக்கும் புகைப்படம் அடங்கிய பிரேம் ஒன்றை ஒரு ரசிகர் பரிசாக அளித்துள்ளார். அதனை அன்புடன் பெற்ற விஜய், அந்தப் புகைப்படத்தில் தனது கையொப்பத்தை இட்டுப் பின்னர் அதே ரசிகருக்கு திருப்பி வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியதால், அது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து சாட்டை துரைமுருகன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை விஜய் பயணித்த பிரச்சார பேருந்துக்குள் இருந்து எந்தவொரு வீடியோவும் வெளியிடப்படாத நிலையில், அஜித் புகைப்படத்துக்கு கையொப்பமிடும் வீடியோ மட்டும் வெளியானது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், அந்தக் காட்சி வெளியில் இருந்து ரசிகன் பார்வையில் எடுக்கப்பட்டிருந்தால் அது இயல்பானதாக இருக்கும், ஆனால் பேருந்துக்குள் இருந்து பதிவு செய்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது திட்டமிட்ட செயலாகும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதை விஜய் அஜித் ரசிகர்களை கவர்ந்து வாக்குகளை பெற முயற்சிப்பதாக துரைமுருகன் விமர்சித்துள்ளார். தற்போது அவரது இந்த கருத்து பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.