கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முன்னதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான பிறகு இதுவரை எந்தவொரு உதவியும் வழங்கப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் வெற்றிக்கழகத்தின் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலைவர் @TVKVijayHQ அவர்கள் நேரடியாக தலையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருந்ததாலும், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களைத் திரட்டி, நிவாரணம் காசோலையாக வழங்கலாமா அல்லது நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாமா என்ற பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மேலும், கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.