கோவையில் நடைபெற்ற ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதத்தின் தொன்மையான நாகரிகம் சரஸ்வதி நதிக்கரையில்தான் உருவானது என்றும், அங்கிருந்துதான் உலகிற்கே தேவையான அறிவுச் சார்ந்த வேதங்களும் தத்துவங்களும் தோன்றின என்றும் குறிப்பிட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நமது வேதக் கருத்துக்கள் அழிக்கப்பட்டாலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் தாக்கம் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் சங்க இலக்கியங்களில் இன்றும் நீக்கமற நிறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஆரியம், திராவிடம் என இன ரீதியாகப் பிரிக்க நினைப்பவர்களின் பொய்யான கருத்துக்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
அதேவேளையில், தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்த ஆளுநர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி தமிழகம் ‘தற்கொலைகளின் தலைநகராக’ மாறி வருவதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 65 பேர் வீதம் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இழந்த நமது உன்னத கலாச்சாரத்தையும் ஆன்மீகத் தத்துவங்களையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீட்டெடுத்து வருவதாகவும், இத்தகைய தத்துவங்களே உலகை அமைதிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
