அதிமுகவில் நிலவி வரும் பிளவு மற்றும் அதிகாரப் போட்டிக்கு இடையே, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீண்டும் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் கே.சி.வீரமணி இணைந்து செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட பொறுப்புகளை நீக்கிய எடப்பாடி பழனிசாமி, அவருக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை (மா.செ.) நியமித்து அதிரடி காட்டினார்.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டைத் திடீரென மாற்றிக்கொண்டுள்ள கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள புதிய மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து பயணிக்க நான் தயாராக உள்ளேன். எப்போது எடப்பாடியாருடன் இணைந்து பயணிப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.சண்முகம் அணியிலிருந்து கே.சி.வீரமணி திடீரென வெளியேறி மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, அந்த அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், நீக்கப்பட்ட 17 மாவட்டச் செயலாளர்களில் கே.சி.வீரமணி மட்டும் தற்போது இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது அதிமுக உட்கட்சி அரசியலில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கழகத்திற்குத் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
