அகமதாபாத்தின் சந்த்கேடா பகுதியில் தோசை சாப்பிட்ட இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது தற்கொலை அல்லது கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற அதிரடி திருப்பத்தை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் பால் பண்ணையிலிருந்து வாங்கப்பட்ட மாவு அல்லது ‘கீரு’ ( புளிக்காத புதிய மோர்) கெட்டுப்போனதால் ஏற்பட்ட உணவு நஞ்சூட்டல் (Food Poisoning) என்று கருதப்பட்ட நிலையில், தடயவியல் ஆய்வகத்தின் (FSL) அறிக்கை அந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

சிறுமிகளின் உடலில் ‘சல்பாஸ்’ (Celphos) எனப்படும் தானியங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தந்தை விமல் பிரஜாபதியின் வீட்டில் இந்த நச்சு மாத்திரைகளை மீட்ட காவல்துறை, இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, திட்டமிட்டு உணவில் விஷம் கலக்கப்பட்ட ஒரு கொடூரச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகளின் பெற்றோர் விமல் மற்றும் பவானா ஆகியோரின் ரத்த மாதிரிகளிலும் அதே நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வேலையில்லாமல் இருந்த விமல், மாடலிங் துறையில் நுழைய ஆசைப்பட்டதும், ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் நிலவிய கடும் நிதி நெருக்கடி மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட மனக்கசப்புகள் இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக, பவானாவின் தந்தை ஒரு மருந்துக் கடை நடத்தி வருவதால், அங்கிருந்து இந்த விஷமாத்திரைகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்த பச்சிளம் சிறுமிகளின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறிய, தற்போது சிகிச்சையில் உள்ள பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தக் காத்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான தகராறு அல்லது பொருளாதாரச் சுமையால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொல்ல முயன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா? எனப் பல கேள்விகளுக்கு விடை தேடி அகமதாபாத் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். பால் பண்ணை மாவு மீது பழியைப் போட்டு மனிதாபிமானமற்ற முறையில் இந்தச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்பது மருத்துவமனையில் உள்ள தம்பதியினர் குணமடைந்த பிறகே முழுமையாகத் தெரியவரும்.