தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தும், அண்ணா தி.மு.க., அமமுக ஆகிய கட்சிகளில் இருந்தும் விலகிய 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடந்த இந்த இணைவில், குறிப்பாக ஓ.பி.எஸ். அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரான ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.
முன்னதாக, ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் அணியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.எல்.நாராயணன் உட்படப் பலரை அண்மையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்திருந்தார்.
தென் மாவட்டங்களில் தனது ஆதரவு தளத்தை மேலும் நிரூபிக்கும் வகையில், மனோஜ் பாண்டியன் விரைவில் அப்பகுதியில் ஒரு மாபெரும் இணைப்பு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
