அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
நாளை (நவ. 27) அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று தகவல் வெளியான நிலையில், ராஜினாமாவுக்குப் பின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் அவர் சிறிது நேரம் பேசினார். இதனால், செங்கோட்டையனைத் திமுகவுக்கு இழுக்கப் பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது.
ஆனால், திமுக கொடுத்த சலுகைகளையும், வாய்ப்புகளையும் செங்கோட்டையன் நிராகரித்துவிட்டதாகத் திமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் தவெகவில் இணையும் முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசியலின் முக்கிய மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அவர் நாளை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
