கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று அவரை பலமாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 2 மாதங்களில் யானை தாக்கி 4 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர். எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.