மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் கோரா குர்த் கிராமத்தில் புதன்கிழமை பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்று ஒரு குடிசை வீட்டின் கூரையை தூக்கிச் சென்றது. அந்த வீட்டில் இருந்த ஜ்வாலா மற்றும் சுனில் என்ற இரண்டு சிறுவர்கள், கூரையை பாதுகாக்க முயற்சித்தபோது திடீரென பறந்து சென்ற கூரையுடன் இருவரும் வெளியே தூக்கிச் செல்லப்பட்டனர்.

இந்த திகிலூட்டும் காட்சி வீடியோவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. சிறுவர்கள் இருவரும் லேசான காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தகுந்த சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை மற்றும் புயல் காற்று காரணமாக மத்தியப் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.