கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமாப்பேரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் பாலகிருஷ்ணன் தனது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை பறித்து சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் நளினி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நளினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.