அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டம் கிசாரி பதர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, நேற்று காலை கிராமத்திற்கு அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு விறகு சேகரிக்க சென்றார். சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடத் தொடங்கினர்.

தேயிலை தோட்டம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், இரவு 9 மணியளவில் தேயிலை தோட்டத்திலேயே சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த போலீசார், குற்றவாளியை கண்டுபிடிக்க விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் பேரில், அதே பகுதியை சேர்ந்த ஜிதன் லோகர் (45) என்பவர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், விசாரணையில், ஜிதன் லோகர் கடந்த காலத்தில் தாயைக் கொலை செய்த வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, 3 ஆண்டுகளுக்கு முன் விடுதலையானது தெரியவந்தது. மீண்டும் இத்தகைய கொடூர குற்றத்தைச் செய்திருப்பது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான தீவிர  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.