மராட்டிய மாநிலத்தில் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே. இவரது தாயார் ஆசராபாய் முண்டே சமீபத்தில் காலமானார். தாயின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாகச் செய்யப்படும் மதச் சடங்குகள் மற்றும் கர்ம காரியங்களைத் தவிர்த்து, இயற்கையைப் போற்றும் வகையில் அவர் எடுத்துள்ள முடிவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

பொதுவாக ஹிந்து மத ஆசாரப்படி, இறந்தவர்களின் அஸ்தி புனித நதிகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், துக்காராம் முண்டே மற்றும் அவரது சகோதரர் அசோக் முண்டே ஆகியோர், தங்களது தாயின் அஸ்தியை ஆற்றில் கரைக்காமல், தங்கள் வீட்டு வாசலில் ஒரு ஆலமரக் கன்றை நட்டு, அதன் வேரிலேயே அஸ்தியை வைத்தனர். இதுமட்டுமன்றி, பத்தாம் நாள் காரியம், பதின்மூன்றாம் நாள் சடங்கு மற்றும் ஊருக்கே விருந்து அளிக்கும் இனிப்பு விருந்த) போன்ற எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் செய்யப்போவதில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து துக்காராம் முண்டே நெகிழ்ச்சியுடன் கூறியதாவது, “இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததும், மகா சக்தியாக விளங்குவதும் இயற்கையே. அந்த இயற்கையைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும், அதற்கு மரியாதை செய்வதும் தான் உண்மையான பக்தி. அதுவே எனது தாய்க்கு நான் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே, அஸ்தியை ஆற்றில் கரைத்து நீரை மாசுபடுத்துவதற்குப் பதிலாக, அதை மரக்கன்று நட்டு மண்ணோடு மண்ணாகச் சேர்த்துள்ளோம் என்றார்.

தனது நேர்மையான பணிக் காலத்தில் சந்தித்த பல இடமாற்றங்களின் போதும் தனது தாயார் தனக்கு மிகப்பெரிய தூணாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். உனக்கு அளிக்கப்படும் பொறுப்பை நேர்மையாகவும், சரியாகவும் செய் என்று என் தாய் எப்போதும் கூறுவார். இடமாற்றங்கள் பற்றி ஆரம்பத்தில் நாங்கள் விவாதிப்போம், ஆனால் அது அரசின் அதிகாரம் என்பதால் பிறகு அதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற சடங்குகளுக்குப் பின்னால் செல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய ஒரு முன்னுதாரணத்தை துக்காராம் முண்டே காட்டியிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.