இந்தியாவின் கிராமப்புறத் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத அங்கமான ‘மரணக் கிணறு’ சாகசத்தைக் கண்டு, வெளிநாட்டுப் பயணி ஒருவர் வியந்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நவீன பொழுதுபோக்கு பூங்காக்களும், டிஸ்னிலேண்டுகளும் உலகெங்கும் இருந்தாலும், இந்தியாவின் சாகசக் கலைகளுக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது.

பிரபல சமூக வலைதளப் படைப்பாளி எடி ரோசெந்தல் (@eddyrosenthal) என்பவர், கடந்த மார்ச் 31, 2026 அன்று இந்த த்ரில்லிங் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், மரணக் கிணற்றின் விளிம்பில் நின்றுகொண்டு அவர் தனது கையில் 20 ரூபாய் நோட்டை நீட்டுகிறார். கிணற்றின் செங்குத்தான சுவரில் கைகளை விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டி வரும் கலைஞர், கண் இமைக்கும் நேரத்தில் எடியின் கையிலிருந்த நோட்டைப் பறித்துச் செல்கிறார். இந்த லாவகத்தைக் கண்டு மிரண்டு போன எடி, “இது இந்தியாவால் மட்டுமே சாத்தியம்! (Only in India)” என்று உற்சாகத்தில் கூச்சலிடுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Eddy (@eddyrosenthal)

‘மரணக் கிணறு’ என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது இயற்பியலின் ‘மையவிலக்கு விசை’ மற்றும் அசாத்தியமான உடல் சமநிலையின் சங்கமம். மரப்பலகைகளால் ஆன அந்த உருளை வடிவக் கட்டமைப்பிற்குள், புவிஈர்ப்பு விசையையே சவாலுக்கு அழைத்து, சுவரோடு ஒட்டி வாகனங்களை ஓட்டுவது மிகப்பெரிய கலை. ஒரு சிறிய பிழை கூட உயிரைப் பறிக்கக்கூடும் என்ற நிலையிலும், இந்தக் கலைஞர்கள் காட்டும் தைரியம் எடியை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனது பதிவில் எடி ரோசெந்தல் குறிப்பிட்டுள்ளதாவது: “இது நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் பைத்தியக்காரத்தனமான (Craziest) மற்றும் ஆச்சரியமான விஷயம். இந்தியாவின் மரணக் கிணறு ஒரு அற்புதம்!” இந்த வீடியோவிற்கு இதுவரை 72 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.

உத்தரப் பிரதேசம், பீகார் முதல் தமிழ்நாடு வரை அனைத்து மாநிலத் திருவிழாக்களிலும் ‘மரணக் கிணறு’ முதன்மை ஈர்ப்பாக உள்ளது. மேலும் சொகுசான பொழுதுபோக்குகளுக்கு மத்தியில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் இந்த ஏழை எளியக் கலைஞர்களின் திறமைக்கு, ஒரு வெளிநாட்டவர் கொடுத்த இந்த அங்கீகாரம் இணையவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.