தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில் நிலவி வந்த தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், அரசுத் துறையில் மிக முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக தாசில்தார்களின் மீது இருந்த அழுத்தம் குறைக்கும் பொருட்டு, முதல் பட்டதாரி மற்றும் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 12 வகையான முக்கியமான சான்றிதழ்களை ஒப்புதல் அளித்து வழங்கும் அதிகாரம் தலைமையிட மற்றும் மண்டலத் துணை தாசில்தார்களுக்கு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் தாசில்தார்கள் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான முக்கியப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாணையின்படி, வாரிசுச் சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள் மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர மென்பொருளில் சிறப்பு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் நிலை, நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அல்லது சான்றிதழ்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவரங்கள் அனைத்தும் விண்ணப்பதாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தெரியும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், ஏதேனும் குறைகளுடன் திருப்பி அனுப்பப்படும் விண்ணப்பங்களை மாநிலத்தின் எந்தப் பகுதியில் உள்ள இ-சேவை மையங்களிலும் எளிய முறையில் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின் மூலம், பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி, கைவிடப்பட்ட பெண், விதவை மற்றும் இடைச்சாதித் திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 12 முக்கியச் சான்றிதழ்களைத் துணை தாசில்தார்களே நேரடியாக வழங்க முடியும்.
வருவாய்துறையில் வரலாற்று மாற்றம்.. தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தார்.. அதிகாரமே அடியோடு மாறியது
சென்னை: முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் உள்ளிட்ட 12 சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்… pic.twitter.com/wDhhpuXlIj
— Subathra Devi (@SubathraDevi_) September 4, 2026
“>
இருப்பினும், எஸ்சி பிரிவினருக்கான சான்றிதழ்களுக்குத் தாசில்தாரும், எஸ்டி பிரிவினருக்கான சான்றிதழ்களுக்குக் கோட்டாட்சியரும் மட்டுமே இறுதி ஒப்புதல் அதிகாரிகளாகத் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
