புதுச்சேரி அரசியல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது! என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) என்.ஆர்.காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது புதுவை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “தவெக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஏதேனும் நடந்தால், அதை நானே முதலிலேயே வெளிப்படையாகத் தெரிவித்துவிடுவேன்” என முதல்வர் ரங்கசாமி அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கூட்டணியில் உள்ள சிக்கல்களை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். பாஜக-வுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா அல்லது தவெக-வை உள்ளே கொண்டு வர முதல்வர் காய் நகர்த்துகிறாரா என்ற விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. ரங்கசாமியின் இந்த ‘ஓப்பன் டாக்’ புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
