நடிகர் விஜய் கரூரில் பிரசார நிகழ்ச்சியை முடித்தபின், திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை செல்ல நேற்று முன்தினம் புறப்பட்டார். அவரது வாகனம் திருச்சி நெடுஞ்சாலைப் பகுதியில் செல்லும் போது, அதனை ஒரு கருப்பு நிற மர்ம கார் பின்தொடர்ந்து வந்ததைக் கண்ட போலீசார் அதனை கவனித்தனர். விமான நிலைய நுழைவுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் விஐபி நுழைவுவாயிலில் உள்ள தடுப்புகளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றது. இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

உடனடியாக காவல்துறையினர் அந்த காரை மடக்கிப் பிடித்து, அதில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், அந்த காரில் இருந்த நபர், “என் குடும்பத்தினர் நடிகர் விஜயை நேரில் பார்க்க ஆவலுடன் இருந்தனர். அதற்காகவே அவரை பின்தொடர்ந்தோம்.” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த மர்ம கார் உத்தரப்பிரதேச (உ.பி.) மாநில பதிவு எண்ணை கொண்டிருந்தது என்பதும், இது மேலும் விசாரணைக்கு இடமளிக்கிறது. தற்போது விமான நிலைய போலீசார் அந்த நபர் மற்றும் அவரது பயண குறிக்கோள்கள் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  விஐபி பகுதிகளில் அனுமதி இல்லாமல் நுழையும் முயற்சி பாதுகாப்பு விதிகளை மீறும் செயலாகக் கருதப்படுவதால், அந்த நபரிடம் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதையும் காவல்துறை பரிசீலித்து வருகிறது.