தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். அந்த பொதுக்கூட்டத்தின் போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவர் புகழ்ந்து பேசிய நிலையில் மாற்றுக் கட்சிக் கூட்டங்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வரை பார்த்து தமிழ்நாடு முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே புதுச்சேரி முதல்வருடன் நடிகர் விஜய் நட்பு பாராட்டிவரும் நிலையில் 2026 தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் அவர் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பாஜக கூட்டணியிலிருந்து விலகி முதலமைச்சர் ரங்கசாமி விஜயுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் நடிகர் விஜய் ரேஷன் கடைகள் இல்லை எனக் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக மத்திய அரசின் மூலம் பொது மக்களுக்கு பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். அதன் மூலம் மக்களுக்கு அரிசி சர்க்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என விஜய் கூறியது தொடர்பாக நிருபர்கள் முதல்வர ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை விஜய் கண்கூடாக பார்க்கலாம் என்று கூறினார். மேலும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அவருக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.