நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘TN 2026’ திரைப்படத்தின் டீசர், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலை கிளப்பியுள்ளது.
இந்தத் திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை ஏளனம் செய்யும் வகையில் இருப்பதாகத் தவெக ஆதரவாளர்களும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் தம்பி ராமையா, இந்தப் படம் எந்த ஒரு தனி நபரையும் அல்லது கட்சியையும் காயப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலோட்டமான தகவல்களை வைத்துக்கொண்டு அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என்றும், படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு ஆதவ் அர்ஜுனா வருத்தப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் பின்னணியில் ஒரு குடும்ப அனுபவத்தை மையமாக வைத்தே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியான பிறகு இந்தப் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
