தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய முதல் உரையை மூத்த பத்திரிகையாளர் மணி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் விஜய்யின் உரையை நான் கூட ஒரு நிமிடம் அண்டர் எஸ்டிமேட் (Underestimate) செய்துவிட்டேன்; இது ஒரு சினிமா ஆடியோ லான்ச் போலத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அவர் ஒரு முழு நேர அரசியல்வாதியாக ‘பிசினஸ்’ பேசிய விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

​குறிப்பாக, தமிழக அரசின் நிதிநிலை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) வெளியிடுவேன் என்ற விஜய்யின் அதிரடி அறிவிப்பு, கடந்த கால நிதி மேலாண்மைத் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் சரியான சாணக்கியத்தனம் என்று அவர் சிலாகித்துள்ளார். “கஜானா காலி” என்ற யதார்த்தமான நிலையை மக்களிடம் ஒளிவுமறைவின்றிப் பேசியது மற்றும் “யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்” என எச்சரித்தது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக மணி சுட்டிக்காட்டியுள்ளார். “நான் மன்னராட்சி மூலம் வந்தவன் அல்ல, அடியில் இருந்து வந்தவன்” என்று விஜய் குறிப்பிட்டது, ஒட்டுமொத்த அரசியல் விமர்சகர்களையும் அவர் பக்கம் திரும்ப வைத்துள்ளதாக மணி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.