தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பாஜக-வில் தலைமை மாற்றத்திற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பிரபல ‘ஜோஹோ’ (Zoho) நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு, அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க வேண்டும் எனப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். “பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டி இவ்வளவு காலம் அரசியல் செய்து வந்த திராவிடக் கட்சிகளுக்கு மக்கள் இப்போது பாடம் புகட்டிவிட்டார்கள்” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களிடையே அண்ணாமலைக்கு இருக்கும் அபாரமான செல்வாக்கைச் சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், அவர் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜக-வை உயிர்ப்பிக்க முடியும் எனக் கருதுகின்றனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய்க்கு இருக்கும் இளைஞர் பட்டாளத்தின் ஆதரவை பாஜக-விற்குத் திருப்ப அண்ணாமலையால்தான் முடியும் என அவரது ஆதரவாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திராவிடக் கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பயப்படாமல், துணிச்சலான தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்ற ஸ்ரீதர் வேம்புவின் கருத்து இப்போது வைரலாகி வருகிறது.
