சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகளான ரூபிகா (வயது 21), கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியுடன் திருமணம் செய்து கொண்டார்.
திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாண்டி, தனது மனைவியுடன் இணைந்து தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக கடந்த 19ஆம் தேதி மனைவி ரூபிகாவின் சொந்த ஊரான களத்துப்பட்டி கிராமத்துக்கு வந்திருந்தார். இருவரும் உறவினர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர்.
இதன் பின்னர், பாண்டி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதற்கு, “தலை தீபாவளி கொண்டாட வந்தவுடன் உடனே வேலைக்குச் செல்கிறீர்களா?” என்று ரூபிகா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாண்டி வேலைக்குச் சென்றுவிட்டார்.
இதனால் மனவருத்தம் அடைந்த ரூபிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். ரூபிகாவின் திடீர் மரணம் அந்த கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
