சேலம் மாவட்டம், தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், இதுகுறித்து சிறுமி தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி சிறுமியின் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.
இந்தக் குற்றத்திற்காக தினேஷ்குமாருக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு ஆவணங்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், தண்டனையை எதிர்த்து குற்றவாளி தினேஷ்குமார் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தக் கொடூரமான செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு,குற்றம் சாட்டப்பட்ட நபர் மன நிலை சரியில்லை எனக்கூறி, சட்டப்பூர்வ பாதுகாப்பை கோருவதற்கு உரிய மருத்துவ சான்றுகள் இல்லை. குற்றம் சாட்டவரின் செயல் கொடூரமானது என்ற போதும், இந்த வழக்கு அரிதிலும் அரிதானது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல எனக் கூறி, தினேஷ்குமாரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. அதேசமயம், அவருக்கு 20 ஆண்டுகளுக்கு எந்தவொரு தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
