பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மிர்புரில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் சூழலில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சைல்ஹெட்டில்நேற்று  தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி, லிட்டன் தாஸின் அதிரடி சதத்தின் (128 ரன்கள்) உதவியுடன் 278ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷசாத் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, பந்தைத் தடுக்க முயன்ற வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவருக்கு, உடனடியாக ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு மைதானத்திற்குவெளியே தூக்கிச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு நிலவிய நிலையில், மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாகப் பரிசோதித்தனர்.

அதிர்ஷ்டவசமாகப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லாததால், துணிச்சலுடன் மீண்டும் மைதானத்திற்குள் களமிறங்கிய ஹசன் அலி, பாகிஸ்தான் அணிக்காகத் தொடர்ந்து பந்துவீசினார். காயம் அடைந்தும் அணியின் வெற்றிக்காக அவர் காட்டிய இந்த அர்ப்பணிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.