ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில், தலையில் நீல நிற டிரம் சிக்கிக்கொண்ட நிலையில் ஒரு காளைச் சுற்றித் திரிந்தது. இதனால், அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தகவலின்படி, அந்த காளையின் தலையில் பிளாஸ்டிக் டிரம் ஒன்றின் மேற்பகுதி மாட்டியது. அதன் பெரிய கொம்புகள் காரணமாக, காளை டிரம்மை தானாகவே அகற்ற முடியாத நிலை உருவாகியது. இதனை கவனித்த பொதுமக்கள், முதலில் அதனை எச்சரிக்கையாகப் பின்தொடர்ந்தனர்.

தற்காலிக அச்சத்துடனும், குழப்பத்துடனும் காளை சந்தை முழுவதையும் சுழன்றது. இதனையடுத்து, சில கிராமவாசிகள் துணிச்சலுடன் முன்வந்து, காளையின் தலையில் மாட்டியிருந்த டிரம்மை அகற்ற முயன்றனர். ஆனால், திடீர் அச்சத்தால் தாக்கப்பட்ட காளை, அவர்களை தள்ளும் நிகழ்வும் நடந்தது.

தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்கள் நீண்ட முயற்சிக்குப் பிறகு, ஒன்றிரண்டு நபர்கள் இணைந்து, டிரம்மை அகற்றினர். சுத்தியலின் உதவியோடு  திட்டமிட்டு செயல்பட்டதினால், காளை விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, காளையும் பொதுமக்களும் மீண்டும் நிம்மதியடைந்தனர்.

 

இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்த வீடியோ வடிவத்தில் இணையத்தில் பகிரப்பட்டிருக்கிறது. @pixelsabhi என்ற X பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

அவரது பதிவில், “இந்த வைரல் காணொளி ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தது. தலையில் டிரம் சிக்கிய நிலையில் சந்தையில் சுற்றிய காளையை கிராம மக்கள் தற்காலிகமான போராட்டத்துக்குப் பிறகு மீட்டனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.