மும்பை குண்டாவலி மெட்ரோ ரயில் நிலையத்தில் வழக்கமாகக் காணப்படும் இஞ்சி நிறப் பூனை ஒன்று தற்போது இணையத்தில் நட்சத்திரமாக மாறியுள்ளது. பயணி சந்தேஷ் சமந்த், அந்தப் பூனை நிலையத்தில் இருப்பதைப் பார்த்து, அதற்கு அதிகாரப்பூர்வ பதவி வழங்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகத்திடம் நகைச்சுவையாக கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மகா மும்பை மெட்ரோ ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நகைச்சுவையாக பதிலளித்து, அந்தப் பூனைக்கு ‘தலைமை பூனை அதிகாரி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. இதையடுத்து குண்டாவலி நிலையப் பூனை மீது பயணிகளின் கவனம் மேலும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் அதன் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வேகமாகப் பரவி வருகின்றன.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள காணொலியில், அந்தப் பூனைக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் அந்தப் பூனையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, அதைத் தடவிக் கொடுப்பது மற்றும் உணவு வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், வழக்கமாக மெட்ரோ நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பரிச்சயமானதாக இருந்த அந்தப் பூனை தற்போது இணையப் பிரபலமாக மாறியுள்ளது. அடுத்த முறை மெட்ரோவில் பயணம் செய்யும்போது அந்த ‘தலைமை பூனை அதிகாரியை’ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் நிர்வாகம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளது.
The internet fame has been acknowledged by our CFO aka Chief Feline Officer. Fan interactions like selfies, cuddles and treats have recorded a surge.
Though we cannot promise an autograph, you may be granted an audience with our CFO the next time you take a Maha Mumbai Metro… pic.twitter.com/T6QtXhHCr0
— Maha Mumbai Metro Operation Corporation Ltd (@MMMOCL_Official) August 24, 2026
முன்னதாக, குண்டாவலி மெட்ரோ நிலையத்தின் நுழைவுப் பகுதியில் அந்தப் பூனை அமர்ந்திருந்த புகைப்படத்தை சந்தேஷ் சமந்த் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். “இந்த அப்பாவி உயிருக்கு ஒரு அதிகாரப்பூர்வ பதவி கொடுக்க வேண்டும்; தற்போது இலவசமாக வேலை செய்து கொண்டிருக்கிறது” என அவர் நகைச்சுவையாக மெட்ரோ நிர்வாகத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், மெட்ரோ நிர்வாகமும் அதே நகைச்சுவை பாணியில் பதிலளித்தது. இதன் தொடர்ச்சியாக அந்தப் பூனைக்கு ‘தலைமை பூனை அதிகாரி’ என்ற பெயர் சூட்டப்பட்டு, அதன் பணிகள் நிலையத்தை சுற்றிப் பார்வையிடுவது, பயணிகளைக் கண்காணிப்பது மற்றும் அனைவரும் ரசிக்கும் இடத்தில் அமர்வது என நகைச்சுவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குண்டாவலி மெட்ரோ நிலையப் பூனை தற்போது பயணிகளிடையே ஒரு வகையான செல்லப்பிராணி நட்சத்திரமாக மாறியுள்ளது. அதனைப் பார்ப்பதற்காகவும், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகவும் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவுகளிலும் இந்தப் பூனைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதனால் ஒரு சாதாரண மெட்ரோ நிலையத்தில் அடிக்கடி தென்பட்ட பூனை, தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படும் பிரபலமாக மாறியுள்ளது. பயணிகளின் மனதை கவர்ந்த இந்த ‘தலைமை பூனை அதிகாரி’ குண்டாவலி மெட்ரோ நிலையத்தின் அன்பான அடையாளமாகவே மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
