கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில், சிந்து என்ற பெண் தலைமை ஆசிரியை சுடிதார் அணிந்து பணிக்கு வந்துள்ளார்.

அப்போது, சுடிதார் அணிந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை என மேலாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, பள்ளியின் காவலாளி கேட்டை மூடி அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை பள்ளி வாசலிலேயே நின்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறைக்கும் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார்.

ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி சுடிதார் அணிந்து வரலாம் என 2021-லேயே உயர்கல்வித் துறை ஆணை பிறப்பித்துள்ள நிலையில், ஆடை விவகாரத்தில் தலைமை ஆசிரியையே தடுத்து நிறுத்தப்பட்ட இச்சம்பவம் கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், சம்மந்தப்பட்ட காவலாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.