தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின்படி, தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்றும், அதிமுக கூட்டணி 114 முதல் 127 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 இடங்கள் வரை பிடிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 155 முதல் 170 இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அசாமில் பாஜக கூட்டணி 96 முதல் 98 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே இழுபறி நீடிக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.