பிரபல யூடியூப்பர் கௌரவ் தனேஜா (Flying Beast), தனது வீட்டில் வாங்கிய தர்பூசணி பழத்திலிருந்து ரசாயன நுரை வெளியேறும் வீடியோவை வெளியிட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இரவு நேரத்தில் வாங்கிய அந்தப் பழத்தைப் பிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்திருந்த நிலையில், மறுநாள் காலை முதல் அதிலிருந்து தொடர்ந்து நுரை தள்ளியுள்ளது.

கடைக்காரர் இது இயற்கை வாயுவினால் ஏற்பட்டது என்று கூறினாலும், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கோடை வெப்பம் காரணமாகப் பழத்திற்குள் ஏற்படும் பாக்டீரியா தொற்று மற்றும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே இது போன்ற நுரை மற்றும் வாயு ஏற்படுவதாகவும், அத்தகைய பழங்களை ஒருபோதும் உண்ணக்கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

​இந்தச் சம்பவம், சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகமான பின்னணியில் அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளது. மும்பை சம்பவத்தில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில், எலி மருந்தில் பயன்படுத்தப்படும் ‘ஜின்க் பாஸ்பைடு’ (Zinc Phosphite) என்ற நச்சுப்பொருள் அந்தப் பழத்திலும், உயிரிழந்தவர்களின் உடலிலும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தற்செயலாக நடந்ததா அல்லது யாராவது திட்டமிட்டுப் பழத்திற்குள் நஞ்சைச் செலுத்தினார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தர்பூசணி போன்ற பழங்களை வாங்குவதில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.