இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்துப் பேசிய முன்னாள் வீராங்கனைகளும், முன்னோடிகளுமான சாந்தா ரங்கசாமி மற்றும் நூதன் கவாஸ்கர் ஆகியோர், ஆரம்ப காலத்தில் தாங்கள் எதிர்கொண்ட கடுமையான போராட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுனில் கவாஸ்கரின் இளைய சகோதரியான நூதன் கவாஸ்கர் பேசுகையில், “அப்போது பணமில்லை, ஸ்பான்சர்கள் அரிதாகவே காணப்பட்டனர். வெளிநாட்டுப் பயணங்கள் மிகவும் அரிதாகவே இருந்தன. மகளிர் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டாகவே கருதப்படவில்லை என்றும், நாங்கள் தொழில்முறையாளர்களாக மதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

எனினும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்ததாகவும், ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் வழங்கி உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் மகளிர் டெஸ்ட் கேப்டனான சாந்தா ரங்கசாமி பேசுகையில், அன்றைய காலகட்டத்தில் நிலவிய வசதி குறைபாடுகளைப் பற்றித் தெரிவித்தார். “ஒரு அணியிடம் மூன்று பேட்கள் மட்டுமே இருந்தன. 20 பேருக்கு நான்கு கழிவறைகள் இருந்தன. உணவு (தயிர்/சாம்பார்) கூட பிளாஸ்டிக் பாத்திரத்தில் வழங்கப்பட்டது.

நாங்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்தோம்; எங்களுடைய கிட்களையும் நாங்களே சுமந்து செல்ல வேண்டியிருந்தது” என்று அவர் நினைவுகூர்ந்தார். 2025ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா பெற்ற வெற்றி, பல சகாப்த கால விடாமுயற்சியின் பலன் என்று குறிப்பிட்ட சாந்தா ரங்கசாமி, “அதற்கான அடித்தளம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. இப்போதுள்ள வீராங்கனைகளுக்குச் சிறந்த வசதிகள் கிடைப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தார்.