தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது, உற்சாக மிகுதியால் தன்னைத் தொடர்ந்த தொண்டர்களிடம், “பாதுகாப்பு கருதி யாரும் பின் தொடர வேண்டாம்” என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
வேலூரை அடுத்த அகரம்சேரியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து விஜய் காரில் புறப்பட்டார். காஞ்சிபுரம் பகுதியில் அவருக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரசார வேனுக்கு மாறிய விஜய், அங்கிருந்து வேலூர் நோக்கிப் பயணமானார்.
வழியில் காஞ்சிபுரம் முதல் வேலூர் வரை சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விஜய்யின் வாகனத்தின் மீது மலர்களைத் தூவியும், உற்சாக முழக்கமிட்டும் தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர்.
நிர்வாகிகள் கூட்டம் இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து சென்னை திரும்ப ஆயத்தமான விஜய், தொண்டர்களிடையே மைக்கில் ஒரு வேண்டுகோளை வைத்தார். அவர் பேசுகையில்,
“நான் இங்கிருந்து சென்னை திரும்பும்போது, தயவுசெய்து யாரும் எனது வாகனத்திற்குப் பின்னாடியோ அல்லது பக்கவாட்டிலோ இருசக்கர வாகனங்களில் வர வேண்டாம். உங்களை நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம்,” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
விஜய்யின் வேண்டுகோளையும் மீறி, உற்சாகம் தாங்காத சில தொண்டர்கள் வேலூர் பைபாஸ் சாலையில் அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டது. உடனே தனது வேனிலிருந்து மீண்டும் பேசிய விஜய், “யாரும் பின் தொடர வேண்டாம்” என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். தலைவரின் நேரடி அறிவுறுத்தலுக்குப் பிறகு, தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் வேலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
