கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. இதையடுத்து பிரதமர் மோடியை மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து அண்ணாமலை, எல் முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் ‘என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டதை போலவே தமிழக மக்களும் செய்வார்கள்.

1991 இல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்ற நான் தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம். திமுக மற்றும்  காங்கிரஸின் கர்வத்தை தமிழக மக்கள் தேர்தலில் அடக்குவர். தமிழக மண்ணில் மாபெரும் மாற்றம் பெற்றுள்ளது என்னால் உணர முடிகிறது. மக்களிடம் கொள்ளை அடிக்கவே திமுக, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

இந்தியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது. 2ஜி ஊழல் முறைகேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம். காமன்வெல்த் போட்டியில் காங்கிரஸ் ஊழல் செய்தது.
பாரதிய ஜனதா கன்னியாகுமரியை நேசிக்கிறது. திமுக -காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. கன்னியாகுமரி -திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை பாஜக அரசு செயல்படுத்தி உள்ளது” என பேசி வருகிறார்.