தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்குத் தொழிற்சங்கங்கள் மத்தியில் தொடர்ச்சியான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களைப் பணியில் அமர்த்துவது பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் சால்வாட் என்கிற நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர் முறை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்றும் பயணிகளின் பாதுகாப்பைக் குறைப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போதைய சூழலில், சால்வாட் நிறுவனத்திற்குப் பதிலாக உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்நிறுவனம் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தமிழகப் போக்குவரத்துக் கழகப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசுப் பேருந்துகளில் தினசரி பயணிக்கும் எளிய பொதுமக்களிடம் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதால், மொழித் தடையால் பல வகையான சிரமங்கள் ஏற்படுவதாகப் பயணிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

வெளிமாநில ஆட்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், சமூக நீதிக்கு முரணான ஒப்பந்தத் தொழிலாளர் முறையை முழுமையாக அடியோடு ஒழித்துவிட்டு, இட ஒதுக்கீட்டு விதிகளின்படி நிரந்தரப் பணியாளர்களை மட்டுமே அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.