ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியைத் தமிழ்நாட்டின் அணியாகப் பாவித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தமிழ்நாட்டு அணி என்கிறோம், அதற்குத் தலைமை தாங்குவது மகேந்திர சிங் தோனி.

ஆனால், அந்த அணியில் எத்தனை தமிழ்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநில உரிமைகள் குறித்துப் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிஎஸ்கே அணியில் தமிழ் வீரர்களுக்கு இடம் கிடைக்க ஏன் போராடவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

​டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான போராட்டமாகச் சித்தரித்து, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். “வெறும் பெயரில் மட்டும் தமிழ்நாடு என்று வைத்துக் கொண்டு, உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை வைத்து அரசியல் பிம்பங்களை உருவாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், உண்மையான வளர்ச்சி என்பது உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்பதில்தான் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிடிவி தினகரனின் இந்தப் பேச்சு சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.