திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் எங்களுக்குத் தனிப்பட்ட வலி இருக்கிறது.

ஆனால், 23 கட்சிகளைக் கொண்ட இந்த மெகா கூட்டணியை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல, அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் எங்களுக்கும் இருக்கிறது” எனத் தனது நிலையை விளக்கினார். ​மேலும் அவர் கூறுகையில், “எங்களது இந்தச் சிறு தியாகம், வரப்போகும் தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

வலதுசாரி சக்திகளை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே, நாங்கள் சில சவால்களைப் பொறுத்துக் கொண்டு கூட்டணியில் பயணிக்கிறோம். கூட்டணி வலிமையாக இருந்தால்தான் எங்களது இலக்கை அடைய முடியும் என்பதால், இதில் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், திருமாவளவனின் இந்த ‘வலி’ நிறைந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி ஒற்றுமைக்காக அவர் காட்டும் இந்த நெகிழ்வுத்தன்மை, திமுக தரப்பிற்கு நிம்மதியைத் தந்தாலும், விசிக தொண்டர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.