தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மறைமுகமாகப் பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 3 ரூபாயும், 20 லிட்டர் குடிநீர் கேன்களின் விலை 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் முக்கியமாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றமானது முறையாகப் பதிவு செய்யப்பட்டு, தரமான முறையில் குடிநீர் வழங்கும் சுமார் 1,840 நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கோடைக்காலம் நெருங்கி வரும் வேளையில், அத்தியாவசியத் தேவையாக உள்ள குடிநீரின் விலை உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
