தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியைத் துரியோதனன் கூட்டமைப்புடன் ஒப்பிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். “திமுக என்கிற துரியோதனக் கூட்டணியை வீழ்த்தக்கூடிய ஆற்றல் கொண்ட பஞ்ச பாண்டவர் கூட்டணியாக நாங்கள் மிகவும் வலிமையாக இருக்கிறோம்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

தங்கள் தரப்பில் நியாயமும், தர்மமும் இருப்பதால் தமிழக மக்கள் தங்களுக்குப் பேராதரவு அளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ​மேலும் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் ஆதிக்கத்தை முறியடிக்கத் தங்களது கூட்டணி தயாராக உள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

மகாபாரதப் போரில் எப்படித் தர்மத்தின் பக்கம் நின்ற பாண்டவர்கள் வெற்றி பெற்றார்களோ, அதேபோல் வரும் தேர்தலில் தங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என டிடிவி தினகரன் சூளுரைத்தார். இவருடைய இந்த மகாபாரத ஒப்பீடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், அந்த ‘ஐந்து பேர்’ யார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.